திங்கள், 30 நவம்பர், 2009

எய்ட்ஸ் ஓர் உயிர்கொல்லி ..

எம தர்மன் ஏறி வரும் புதிய வாகனம்

எளியோர் முதல் வலியோர் வரை வதைக்கும் வாகனம்

உடலின்ப வழி பரவும் உயிர்குடிக்கும் வாகனம்

குருதி வழி பரவும் இந்த குரூர வாகனம்

வெள்ளையணு சந்ததியை சிதைக்கும் வாகனம்

வெள்ளைகார நாட்டிலிருந்து வந்த வாகனம்

வேசி வீடு தேடிப்போயி வாங்கும் வாகனம்

வேதனையை கூட்டிவிடும் இந்த வாகனம்

ஒருவனுக்கு ஒருத்தி என்றால் ஒதுங்கும் வாகனம்

ஒழுக்கநெறி தவறிவிட்டால் வரும் வாகனம்

வந்துவிட்டால் போவதில்லை இந்த வாகனம்

வராமல் காத்துவிட்டால் தொலையும் வாகனம்

ஆசைப்பட்டு வாங்கிவிட்டால் அவஸ்தை வாகனம்

வாழ்க்கை எனும் அழகிய பாதையில்

வழி தவறும் இந்த வாகனம் வேண்டாம் நண்பர்களே.

திங்கள், 26 அக்டோபர், 2009

சொல்லடி பெண்ணே....

சொல்லடி பெண்ணே....
என்னை காதலை ஏற்பாயா ?
உனக்கு பிடித்ததையெல்லாம்
செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு பிடிக்காத எதையும்
செய்வதில்லை என்பதற்காக..
உன் மகிழ்ச்சியை
இரட்டிபாக்குவேன் என்பதற்கில்லை...
உன் சோகத்தை
பாதியாக்குவேன் என்பதற்காக..
உன் நண்பர்களோடு
நட்பு பாராட்டுவேன் என்பதற்கில்லை...
உன் தனிமையில்
தோள் கொடுப்பேன் என்பதற்காக..
உனக்கு தெரிந்து தான்
எல்லாம் செய்வேன் என்பதற்கில்லை...
உனக்கு தெரியாமல்
எதையும் செய்வதில்லை என்பதற்காக..

சனி, 24 அக்டோபர், 2009

அவர்களுக்கு தெரியாது.....


எல்லோரையும் போலத்தான்
நானும் காதலை சொல்ல
நண்பர்களிடம் ஐடியா கேட்டேன்....
எளிதாய் சொன்னார்கள்
அந்த பெண்ணிடம் சொல்
நீ அவளை காதலிப்பதை என்று...
காதலை பெண்ணிடம் சொல்வது எளிது தான்..
ஆனால், அவர்களுக்கு தெரியாது....
நான் காதலிப்பது தேவதையை என்று......

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தொடருவோம் நம் பயணத்தை...

அன்பு அன்னியமற்று இருக்கும் வரை

ஆசை அளவுக்குள் இருக்கும் வரை

இன்பம் இனிமையாய் இருக்கும் வரை

ஈட்டல் ஈடுகொடுக்கும் வரை


காதல் கண்ணியமாய் இருக்கும் வரை

கற்பு கட்டுக்குள் இருக்கும் வரை

சொந்தம் சொத்து இருக்கும் வரை

சோகம் நினைவு இருக்கும் வரை


துன்பம் இன்பம் வரும் வரை

துயரம் குதூகலம் வரும் வரை

தூக்கம் விழிப்பு வரும் வரை

தூரம் அருகில் வரும் வரை


தன்னம்பிக்கை முயற்சியாய் மாறும் வரை

முயற்சி செயலாய் மாறும் வரை

செயல் வடிவம் பெறும் வரை

வடிவம் வாழ்க்கை தரும் வரை


உழைப்பு உன்னதமாய் மாறும் வரை

ஊக்கம் உயர்வு தரும் வரை

தோல்வி வெற்றியாய் மாறும் வரை

தொடருவோம் நம் பயணத்தை……

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

நம்பிவிடாதே..!!!!

உயிரினும் மேலான... தோழியே,
ஒவ்வொரு இரவும் உன் குறுஞ்செய்தி
வரவுக்காக காத்திருக்கிறது என் செல்பேசி (நானல்ல)

குறுஞ்செய்தி வரவுக்கு பின்
குறு குறுக்கும் பார்வையுடன்
நோக்கின்றன என் கண்கள் (நானல்ல)

செய்தியின் அகம் கண்டு
நகைக்கின்றன, என் உதடுகள் (நானல்ல)

பதில் செய்தி அனுப்ப சொல்லி
என் விரல் பார்த்து நகைக்கின்றன
செல்பேசியின் பொத்தான்கள் (நானல்ல)

நம்பிவிடாதே என் பதில் செய்திகளை....,
எல்லாம் என் செல்பேசியின் லீலை ....
நம்பிவிடாதே (நானல்ல)

திங்கள், 7 செப்டம்பர், 2009

நட்பின் காதல்



சந்தித்தேன்
ரசித்தேன்
கண்களால்
யாரை ?

கற்பூர விழிகளில் பற்றி எரிகிறது காதல்
மூச்சு காற்றில் முகம் காட்டும் காதல்
இதழ்களில் தெரிக்கும் இருமாப்பு காதல்
கழுத்தில் நெளியும் கம்பீர காதல்

மார்புகளில் மயங்கிய மாண்பும் காதல்
இடுப்புடன் இறுகிய இம்சை காதல்
கால்களை கழுவிய கவிதை காதல்
கூந்தலை தழுவிய கும்மிருட்டு காதல்

கொலுசு சத்தத்தில் கொஞ்சும் காதல்
பாத சுவடுகளில் படிந்த காதல்
பளிங்கு கன்னங்களில் பதிந்த காதல்
கோபத்தில் வெளிவரும் மௌனம் காதல்

கனவினில் துரத்தும் கவிதை காதல்
கண்கள் தொடங்கும் கலகம் காதல்
இதயம் இடம்மாறும் இன்பம் காதல்
இத்துனை வரிகளும் நட்பின் காதல்..


புதன், 19 ஆகஸ்ட், 2009

அக்கால, இக்கால தமிழ் நூல்களின் தொகுப்பு PDF வடிவில்

'' சங்கத்தில் பிறந்தவளே

புது சரித்திரங்கள்

கண்டவளே சிங்க

நிகர் திராவிடத்தின்

சீரிளமை குன்றா செந்தமிழே..

இணைய மொழி உலகிலும்

உன் கொடி தான் பறக்கிறது ஒய்யாரமாய்.. ''

சங்க காலத்து இலக்கியத்தில் தொடங்கி,
பாரதியின் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் வரை நீண்டு,
செயகாந்தன் , வைரமுத்து காலம் வரையிலான நல்ல பலகவிதை , இலக்கியம் , சிறுகதைகள் ஆகியவை மதுரை இலக்கிய மின்தொகுப்பு திட்டம் மூலம் மின்நூலாக பிடிஎப் வடிவில் தொகுத்து இணைய உலகில் தமிழ் இலக்கியம் எடுத்து செல்ல பட்டிருக்கிறது.

இது இனி வரப்போகும் சமுதாயத்திற்கு தமிழ் இலக்கியத்தை எளிதாக கொண்டு செல்ல உதவும் என்பது திண்ணம்.

இலக்கிய ரசனை உள்ளவர்கள்.

இங்கே அழுத்தி தமிழ் இலக்கியத்தை பருகலாம்..

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

விழிகளோ பொறு பொறு என்கிறது
இதழ்களோ எடு எடு என்கிறது
பொறுப்பதா எடுப்பதா ஏனடி போடுகிறாய் புதிரை
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கால் சலங்கை சலசலக்கிறது
கை வளையல் கலகலக்கிறது
உதடுகள் மட்டும் உதிர்க்க மறுக்கிறதே ஏன் ?
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்ணோடு கண் பேசி அறிந்த உண்மையை
மூச்சுகாற்றின் அலைகளில் அறிந்த உண்மையை
ஒரு முறையாவது உன் அசைத்து சொல்லிவிடு
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில் !



கண்களால் கவிதை சொல்லும் நீ
காற்றினில் இசை அனுப்பும் நீ
ஏனடி,
உதடுகளால் உண்மையை உதிர்க்க மறுக்கிறாய்..
விரைவில்,
உன் மௌனகீதத்தை மறிக்க செய்து
உதடுகள் வழியே உண்மையை ஜனிக்க செய்திடு....
ஏனெனில்,
ஒன்றுமே புரியவில்லை உன் மௌனகீதத்தில்!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சுதந்திரதினம் 1947 !!! 2009 ?????



பண்பாட்டிலும் , பழமையிலும் ,பகுத்தறிவிலும்
வனப்புடன் வளங்கொழித்த பாரத்தேசமே
வணிகமாய் வந்தானே வெள்ளை பரங்கியன்
வளங்களை வாரிசுருட்டியதோடு விட்டிருக்கலாம்
மதிமயங்கியதில் மண்ணாசை வந்ததே!!

சிறப்புற்ற பெரியோரை சிறையில் அடைத்தான்
வெகுண்டெழுந்தனர் விடுதலை வெறியர்கள்
வெள்ளை பரங்கியரை நாராய் கிழித்தனர்..
அன்று,
நள்ளிரவில் கிட்டியது சுதந்திரம் இந்திய தாயிற்கு

முடியரசும் வெளியரசும் மறைந்தோடின
குடியரசும் நல்லரசாய் முடிசூடின
குடிசைவாழ் மக்களும் கூத்தாடினர்
குமரி பெண்களும் சூழ்ந்தாடினர்

இடையில் தான் ஏதோ இன்னல் வந்ததையா
ஈட்டி வைத்த சுதந்திரம்தான் காற்றில் பறந்ததையா
உனக்கா எனக்கா போட்டியில நாற்காலி
ஊர்சனம் படும்பாடோ உடைந்த நாற்காலி

ஆனால் இன்று,
சுதந்திரம் கிடைத்துவிட்டது
பணவான்களுக்கு பள்ளி,கல்லூரிகளை
வியாபார கூடமாக்க..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
வியாபார நோக்கத்திற்காக
பத்திரிக்கை தர்மத்தையும் தாண்டி
எதையும் செய்தியாக்க
செய்திதாள்களுக்கு...

சுதந்திரம் கிடைத்துவிட்டது
கொள்கையில்லாமல் கட்சிதொடங்கவும்
காசுகொடுத்து ஓட்டு வாங்கவும்
அரசியல்வாதிகளுக்கு..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெற்று
பிறப்பிற்கும் , இறப்பிற்கும்
சான்றிதழ் வழங்கிட..

சுதந்திரம் கிடைத்துவிட்டது
சாதிய சங்களுக்கும் , இன பிரிவினையாளர்களுக்கும்
தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக
இந்திய தாயை இன்னும் பல
மாநிலங்களாக கூறுகளிட
போராட்டம் நடத்திட..

ஆனால்,
சுதந்திரம் கிடைத்துவிட்டதா
எல்லா இந்திய மக்களுக்கும்
பசியிலிருந்தும் , பட்டினியிலிருந்தும்
வறுமையிலிருந்தும் , வசதியின்மையிலிருந்தும்
அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களிலிருந்தும்...

சுதந்திரம் கிடைத்துவிட்டதா
பெண்களுக்கு
வரதட்சணை வன்கொடுமையிலிருந்து
மறுமண மறுப்பிலிருந்து
ஆணாதிக்க சமூகத்திடமிருந்தும்
கட்டுபாடற்று திரியும் காமுகர்களிடமிருந்தும்....

இறுதியாய் ஒன்று......
கிடைத்துவிட்டதா சுதந்திரம்
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும்
குண்டு துளைக்காத கூண்டின்
வெளியே வந்து.....
சுதந்திர தின வாழ்த்து சொல்ல...????

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

இதோடு நிறுத்திகொள்.....

*உன் கண்களால்

என் கண்களை பறித்து

குருடனாக்கிவிட்டாய்

*என் இதழில்

உன் இதழ் பொருத்தி

எனை ஊமையாக்கிவிட்டாய்

*இதோடு நிறுத்திகொள்

என் மூச்சுகாற்றையும் உறிஞ்சி

எனை சவமாக்கிவிடாதே

நான் சாவதற்கு பிறக்கவில்லை

உன்னோடு வாழ்வதற்கு பிறந்திருக்கிறேன்..

சனி, 8 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை

குறுங்கவிதைகள்....

இயற்கை:

மனிதனின் கட்டுக்குள்
அடங்காத கணப்பொழுது.....

கூந்தல்:

மங்கையர் சிரசினில்
மையல் கொண்ட
கார்மேகம்
கூந்தல்..

கண்:

காதலர்களுக்கென்றே
படைக்கப்பட்ட
தகவல்தொடர்பு சாதனம்..

நட்சத்திரம்:

வானமெனும்
சோலையில்
பூத்திருக்கும் மின்சாரபூக்கள்...

சனி, 9 மே, 2009

என் அன்னை...

* உயிர் தந்து மெய் தந்து
உதிரத்தில் பால் தந்து
ஊட்டி வளர்த்தவள்...

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....


* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* அளவற்ற அன்பு தந்து
ஆசையுடன் பாசம் தந்து
அன்புடன் வளர்த்தவள் !

* உள்ளிருக்கும்போது நான் உதைத்தேன்
வெளியிலிருக்கும்போது அவள் உதைத்தாள்
எனை நல்வழிபடுத்த.....

* அவளில்லையேல் நானில்லை
எனினும்,,
அவளுக்காகவே நானிருக்கிறேன்..

* நான்,
தவழும் போது நடையும்
உளறிய போது பேச்சும்
ஓடும் போது விளையாட்டும்
பள்ளிக்கு செல்லும்போது படிப்பும்
போட்டிகளுக்கு செல்லும்போது துணிவும் தந்தவளுக்கு, ,
என்னால் அன்னையர் தினத்தன்று தர இயன்றது,,
தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே... காரணம்,,,
பொருளீட்டல் நிமித்தம் நானும், அன்னையும் வெவ்வெறு ஊர்களில்.....!!!!!

திங்கள், 4 மே, 2009

யார் இவள் ?

இரவு நேரத்தில் நீ இன்றி நானா ?
நெஞ்சம் பதைபதைக்கிறது...
உன் உடல் கொண்டு என் உடல்
மறைப்பதில் தான் எத்துனை சுகம்...!
உன்னை அணைத்து உறங்கிய சில
இரவினில் மூச்சு திணறலும் உண்டு...
ஆயினும்,
எனை குளிர் பயத்திலிருந்து காக்கும்
உன் பணி உயர்வானது
யார் இவள் தெரிகிறதா???
.
.
.
.

வேறு யார்... என் இரவு காதலி சால்வை தான்!!!

அழகிய எல்லோரா...........

புனேவிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நமது மூதாதையர்களின் அற்புத கலை படைப்பு தான் எல்லோரா குகை கோவில்கள்,சைவம்,புத்த மற்றும் சைன மத கடவுளர்களை, மலைகளைகுடைந்து தத்துருபமாக செதுக்கி இருக்கிறார்கள்.பண்டைய மனிதர்களின் இக்கலை படைப்பை காண கண் கோடி வேண்டும்.எல்லோரா குகை கோவிலை காண புனேயிலிருந்து ஔரங்கபாத்திற்கு பேருந்து அல்லது ரயிலில் சென்று ,அங்கிருந்து 30 கிமீ தொலைவுள்ள எல்லோரா குகை கோவில் எனும் மனிதனின் அற்புத கலை படைப்பை வாடகை வாகனத்தில் சென்றடையலாம்.
மேலே இணைக்க பட்டுள்ள புகைபடம் , கடந்த வாரம் நான் அந்த அற்புதத்தை பரவசபட்டப்போது கிளிக்கியது......

வியாழன், 23 ஏப்ரல், 2009

குறுங்கவிதை


-- காதல் தோல்வி --

உன் இதயம்

இரும்பென்று

தெரியாமல்

மோதியதில்

என் இதய கண்ணாடியில்

சேதம்....

புதன், 22 ஏப்ரல், 2009

அன்பு நண்பனுக்கு.....



அன்பு நண்பா உனக்கு,

எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது

கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்

உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !

புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது

சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்

மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !

கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்

தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது

கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !

ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,

என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்

துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............

காதல்


பணக்காரர்களுக்கு இது ஒரு பொழுதுபொக்கு
பெற்றோகளுக்கு இது ஒரு பெருந்தொல்லை
ஞானிகளின்கூற்றுபடி இது ஒரு தவநிலை
நம்பிக்கைக்கு இது தான் நட்சத்திரம்!
கவிஞர்களுக்கு இது ஒரு பாடுபொருள்
காளையர்களுக்கு இது ஒரு தேடுபொருள்
கன்னியர்களுக்கு இது ஒரு கண்வித்தை
கலைஞர்களுக்கு இது ஒரு அட்சயப்பாத்திரம்
ஆத்திகவாதியை பொருத்தவரை தேவையற்றது
நாத்திகவாதியை பொருத்தவரை தேவைஇதுதான்
காதல்செய்யாதவரை பொருத்தவரை வேண்டாத வேலை
காதலர்களை பொருத்தவரை இதுதான் வேலை
என்னை பொருத்தவரை,,,
மனித இனத்தின் ஆரம்பம் இதுதான்
உண்மை உணர்ச்சிகளின் உயர்ந்த இடம் இதுதான்
பந்தபாசங்களின் பசுமைபுரட்சி இதுதான்
ஆசாபாசங்களின் ஆணிவேர் இதுதான்

உண்மைகாதல் என்பது உயரிய அன்பை தவிர
வேறொன்றுமில்லை....

மழை


என் கவிதை பயணத்தின் முதல் கைக்குழந்தை ,,,,,,,,
மழையே மந்திர புன்னகை நீ
இயற்கையின் இன்ப மழலை நீ
ஏற்றி விடும் ஏணியும் நீ
ஏறி மிதிக்கும் எத்தனும் நீ
வாரி வ்ழங்கும் வள்ளலும் நீ
வாரி விடும் வக்கிரனும் நீ
ஆனாலும்,,,
எங்கள் நகைப்பே என் அழுகையின் ஆரம்பம் தான்.....

முன்னுரை

வடகரை வேலன் அண்ணாச்சியோட blog (http://vadakaraivelan.blogspot.com) பார்த்ததும் பனிரெண்டாம் வகுப்புகளிலும் , கல்லூரிகளிலும் நான் எழுதிய கவிதைகளை , இணையத்தில் பதிய ஆர்வம் வந்தது , இதோ ஆரம்பித்து விட்டேன்... படிப்பு மற்றும் வேலை நிமித்தம் நின்று போன கவிதை தேடல் மீண்டும் ஆரம்பம்..

எனது முதல் கவிதையையும் ,எனது நண்பனின் பிறந்த நாள் அன்று எழுதிய கவிதையையும் இனி வரும் பதிவில் உங்களோடு பகிர்வதில் இரும்பூதடைகிறேன்.....

Bookmark and Share