பண்பாட்டிலும் , பழமையிலும் ,பகுத்தறிவிலும்
வனப்புடன் வளங்கொழித்த பாரத்தேசமே
வணிகமாய் வந்தானே வெள்ளை பரங்கியன்
வளங்களை வாரிசுருட்டியதோடு விட்டிருக்கலாம்
மதிமயங்கியதில் மண்ணாசை வந்ததே!!
சிறப்புற்ற பெரியோரை சிறையில் அடைத்தான்
வெகுண்டெழுந்தனர் விடுதலை வெறியர்கள்
வெள்ளை பரங்கியரை நாராய் கிழித்தனர்..
அன்று,
நள்ளிரவில் கிட்டியது சுதந்திரம் இந்திய தாயிற்கு
முடியரசும் வெளியரசும் மறைந்தோடின
குடியரசும் நல்லரசாய் முடிசூடின
குடிசைவாழ் மக்களும் கூத்தாடினர்
குமரி பெண்களும் சூழ்ந்தாடினர்
இடையில் தான் ஏதோ இன்னல் வந்ததையா
ஈட்டி வைத்த சுதந்திரம்தான் காற்றில் பறந்ததையா
உனக்கா எனக்கா போட்டியில நாற்காலி
ஊர்சனம் படும்பாடோ உடைந்த நாற்காலி
ஆனால் இன்று,
சுதந்திரம் கிடைத்துவிட்டது
பணவான்களுக்கு பள்ளி,கல்லூரிகளை
வியாபார கூடமாக்க..
சுதந்திரம் கிடைத்துவிட்டது
வியாபார நோக்கத்திற்காக
பத்திரிக்கை தர்மத்தையும் தாண்டி
எதையும் செய்தியாக்க
செய்திதாள்களுக்கு...
சுதந்திரம் கிடைத்துவிட்டது
கொள்கையில்லாமல் கட்சிதொடங்கவும்
காசுகொடுத்து ஓட்டு வாங்கவும்
அரசியல்வாதிகளுக்கு..
சுதந்திரம் கிடைத்துவிட்டது
அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெற்று
பிறப்பிற்கும் , இறப்பிற்கும்
சான்றிதழ் வழங்கிட..
சுதந்திரம் கிடைத்துவிட்டது
சாதிய சங்களுக்கும் , இன பிரிவினையாளர்களுக்கும்
தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக
இந்திய தாயை இன்னும் பல
மாநிலங்களாக கூறுகளிட
போராட்டம் நடத்திட..
ஆனால்,
சுதந்திரம் கிடைத்துவிட்டதா
எல்லா இந்திய மக்களுக்கும்
பசியிலிருந்தும் , பட்டினியிலிருந்தும்
வறுமையிலிருந்தும் , வசதியின்மையிலிருந்தும்
அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களிலிருந்தும்...
சுதந்திரம் கிடைத்துவிட்டதா
பெண்களுக்கு
வரதட்சணை வன்கொடுமையிலிருந்து
மறுமண மறுப்பிலிருந்து
ஆணாதிக்க சமூகத்திடமிருந்தும்
கட்டுபாடற்று திரியும் காமுகர்களிடமிருந்தும்....
இறுதியாய் ஒன்று......
கிடைத்துவிட்டதா சுதந்திரம்
குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும்
குண்டு துளைக்காத கூண்டின்
வெளியே வந்து.....
சுதந்திர தின வாழ்த்து சொல்ல...????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக